Published : 04 Mar 2020 11:25 AM
Last Updated : 04 Mar 2020 11:25 AM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாஸ்; வரும் 14-ம் தேதி பாராட்டு விழா: அன்புமணி அறிவிப்பு

ராமதாஸ் மற்றும் அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாஸுக்கு வரும் 14-ம் தேதி மயிலாடுதுறையில் பாராட்டு விழா நடத்தப்படும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 4) வெளியிட்ட அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களின் நான்கரை ஆண்டு பெருங்கனவு வெற்றிகரமாக நனவாகியிருக்கிறது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றால், அந்த கனவு நிறைவேற அனைத்து வழிகளிலும் அடிப்படையாக இருந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ் தான்.

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும், அந்த திட்டத்திற்கு எதிரான முதல் குரல் ராமதாஸிடமிருந்து தான் ஒலிக்கும் என்பதை தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஒப்புக்கொள்வார்கள். அதேபோல், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் வலியுறுத்திய அரசியல் கட்சித் தலைவர் ராமதாஸ் தான்.

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன், முந்தைய திமுக அரசு ஒப்பந்தம் செய்து காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு பெருந்துரோகம் இழைத்தது. அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடியதாலும், அப்போது ஆட்சியிலிருந்து ஜெயலலிதா தலைமையிலான அரசு மக்களின் உணர்வுகளை மதித்து, குஜராத் நிறுவனத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்காததாலும், மு.க.ஸ்டாலின் செய்துகொண்ட மீத்தேன் எரிவாயு ஒப்பந்தம் 2014-ம் ஆண்டில் காலாவதி ஆனது.

அதனால், காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் நிம்மதியடைந்த நிலையில், பாறை எரிவாயு திட்டங்களை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்தது. மீத்தேன் திட்டத்தை விட பாறை எரிவாயு திட்டம் மிகவும் ஆபத்தானது என்பதால், அதை எதிர்த்து ராமதாஸ் தான் மாபெரும் போராட்டங்களை அறிவித்து, முன்னெடுத்தார்.

அந்தத் திட்டங்களை முறியடிப்பது குறித்து விவசாய அமைப்புகளுடன் விவாதித்த ராமதாஸ் தான், காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலில் வேறு எந்த கட்சியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வாக்குறுதி அளிக்கவில்லை.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான ராமதாஸின் பணிகள் அத்துடன் நிறைவடைந்து விடவில்லை. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தவர் ராமதாஸ் தான்.

அதுமட்டுமின்றி, 03.03.2017 அன்று என்னை நெடுவாசலுக்கு அனுப்பி, அங்கு போராடி வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வைத்ததுடன், தனியாகவும் ஒரு போராட்டத்தை நடத்த வைத்தார். தொடர்ந்து 21.06.2017 அன்று கதிராமங்கலத்துக்கு என்னை அனுப்பி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வைத்தார்.

அதன் உச்சமாக அந்த ஆண்டின் ஜூலை 28, 29, 30 ஆகிய நாட்களில் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க வலியுறுத்தி காவிரி தமிழகத்திற்குள் நுழையும் ஓகனேக்கலில் தொடங்கி கடலில் கலக்கும் பூம்புகார் வரை ராமதாஸின் ஆணைப்படி நான் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டேன்.

2018-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி சென்னையில் விவசாய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்களை ராமதாஸ் நிறைவேற்றினார்.

ராமதாஸின் ஆணைப்படி அதே ஆண்டின் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தொடங்கி நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வழியாக சிதம்பரம் வரை காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் துண்டறிக்கைகளை வழங்கும் பயணத்தை நான் மேற்கொண்டேன்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க 10 கோரிக்கைகளை முன்வைத்த ராமதாஸ், அந்தக் கோரிக்கைகளில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்வதை முதல் கோரிக்கையாக இடம் பெறச் செய்தார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை ஒரு முறை டெல்லியில் சந்தித்தும், முதல்வரை ஒருமுறை அவரது இல்லத்தில் சந்தித்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, என்னை இருமுறை முதல்வரை சந்திக்க வைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தச் செய்ததுடன், இதே கோரிக்கைக்காக இரு முறை முதல்வருக்குக் கடிதமும் எழுத வைத்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாடாளுமன்ற மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் இதை வலியுறுத்தவும் செய்தார்.

ராமதாஸின் இந்த இடைவிடாத வலியுறுத்தல் காரணமாகவே காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கு முன் பாமக உருவாக்கிய இக்கோரிக்கையை சாத்தியமாக்கிய பெருமை ராமதாஸையே சேரும்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கிக் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸுக்கு விவசாய அமைப்புகளின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வரும் 14-ம் தேதி சனிக்கிழமை இப்பாராட்டு விழா நடைபெறும். இவ்விழாவில் ராமதாஸுடன் நான், பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வர்" என அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x