

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மூன்றாவது முறையாக இன்று (மார்ச் 4) ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10,300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கடந்த ஜன.11-ம் தேதி நடைபெற்றது.
ஆனால், அன்றைய தினம் திருப்புவனத்தில் நடைபெற்ற தேர்தலின் போது ஒன்றிய அலுவலகத்தில் சம்பந்தமில்லாதவர்கள் கூடியிருந்ததாக அதிமுகவினர் புகார் தெரிவித்ததால் தேர்தல் நடத்தப்படவில்லை.
இரண்டாவது முறையாக, ஜனவரி 30-ல் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் தேர்தலை ரத்து செய்து அறிவித்தார்.
இந்நிலையில் இன்று 3-வது முறையாக நடைபெறவிருந்த மறைமுகத் தேர்தலை மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கையொப்பமிட்டு அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதில், "சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வந்த கடிதத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 2 சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாக வந்த புகாரில் 2 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டது மாவட்ட எஸ்.பி அறிக்கையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தல் நடத்திடும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையினை பராமரித்திருடும் பொருட்டும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாத சூழ்நிலை உள்ளதால், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் ஒன்றியக் குழுத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.