

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மறுமணம் செய்ய இடையூறாக இருந்த ஒன்றரை மாத பெண் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மண்ணம்பந்தல் மூங்கில்தோட்டம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் கணேசன்(35). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மேலத்தெருவைச் சேர்ந்த பைரோஸ் பானு(28) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதான மகாலட்சுமி, ஒன்றரை மாதமேயான கமர்நிஷா என 2 பெண் குழந்தைகள்.
கணேசன் தன் மனைவி பைரோஸ் பானுவுடன் திருப்பாலத்துறையில் ஒரு வாடகை வீட்டில்வசித்து வந்தார். கடந்த சிலதினங்களுக்கு முன் மயிலாடுதுறையில் உள்ள தன் தாய் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதால் அவரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு கணேசன் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி தன் கணவருடன் போனில் பேசிய பைரோஸ் பானு, குழந்தை கமர்நிஷா திடீரென இறந்துவிட்டதாகக் கூறினார்.
திடீரென இறந்த குழந்தை
இதையடுத்து, உடனே திருப்பாலத்துறைக்கு வந்த கணேசன், தன் குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார், பைரோஸ்பானுவிடம் விசாரித்தனர்.
மறுமணம் செய்ய திட்டம்
விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் தெரிவித்ததாவது: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த முகமது தல்கா(46) என்பவருக்கு பைரோஸ் பானுவை மறுமணம் செய்து கொடுக்க பைரோஸ் பானுவின் தந்தை அக்பர் அலி(50), அவரது தாய் மதீனா பீவி(47) ஆகியோர் திட்டமிட்டனர். மறுமணத்துக்கு ஒன்றரை மாத குழந்தை இடையூறாக இருக்கும் எனக் கருதிய அவர்கள், அதைக் கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கணேசன் ஊருக்குச் சென்றிருந்த நிலையில் அக்பர் அலி, மதீனா பீவி, பைரோஸ் பானு, முகமது தல்கா ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்துக் குழந்தையை கொலை செய்துள்ளனர் என தெரிவித்தனர்.
இதையடுத்து, பைரோஸ்பானு உட்பட 4 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்த பாபாநாசம் போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.