

என்ஆர்சி., என்பிஆர் கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக சிறுபான்மையினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, தன்னிடம் மனு அளித்த முஸ்லிம் பிரமுகர்களிடம் முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று முதல்வர் பழனிசாமியிடம், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில், முஸ்லிம் பிரமுகர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போது சிறுபான்மையிரிடையே ஒருவித அச்ச உணர்வை என்ஆர்சி., என்பிஆர் மற்றும் குடியுரிமைச் சட்டம் ஆகியவை ஏற்படுத்தியுள்ளது. இதில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் இன்னல்கள் தரக்கூடிய அம்சங்கள் உள்ளன.
பெரும்பாலும் கணக்கெடுப்புப் பணிக்காக இல்லங்கள் தோறும் அலுவலர்கள் வரும்போது, வீடுகளில் ஆண்கள் இருக்கமாட்டார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் அலுவலர்கள் கேட்கும் விவரங்களை தரும் அளவுக்கு கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதால், தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, என்ஆர்சி., என்பிஆர் கணக்கெடுப்புகளை பெரும்பான்மையான மாநிலங்கள் அமல்படுத்தமாட்டோம் என்று முடிவெடுத்ததைபோல, தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் (என்.பி.ஆர்.) 2010-ம் ஆண்டின்போது உள்ள அம்சங்களே, 2020 கணக்கெடுப்பின் போதும் தொடரவேண்டும்” புதிய படிவத்தில் தந்தை, தாய் பிறப்பு விவரங்கள், நாள், இடம் போன்றவை கேட்பதும், பாஸ்போர்ட் எண் கேட்பதும், மக்களிடையே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். இது தொடர்பாக மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். எங்களை அழைத்து, எங்களது கோரிக்கைகளை கேட்டுக்கொண்டதற்காக ஐக்கிய ஜமாஅத் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் பழனிசாமி, “இது தொடர்பாக சிறுபான்மையினர் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. ஏற்கெனவே மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளேன்.
தமிழக அரசு எப்போதும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாகவே இருக்கும். எனவே, எந்த பயமும் தேவையில்லை” என்று உறுதியளித்தார்.