

‘கோவிட்19 வைரஸ் (கரோனா) தாக்கும் முன் எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என, ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 721 மீனவர்கள், ஈரானில் தங்கி, அந்நாட்டைச் சேர்ந்த மீன்பிடி நிறுவனங்களின் படகுகளைக் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஈரானில் தற்போது, கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சொந்த நாடு திரும்ப முடியாமல் ஈரான் துறைமுகத்தில் தவிக்கும் இவர்கள், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், ‘ஈரான் துறைமுகத்தில் விசைப்படகிலேயே தங்கியுள்ள எங்களுக்கு அளிக்கப்பட்ட உணவு, தண்ணீர் தீர்ந்துவிட்டது. குறைந்தஅளவு உணவை அனைவரும் பகிர்ந்து சாப்பிடுகிறோம். நோய்த் தொற்றை தடுக்கும் முகக்கவசம் கூட வாங்க முடியவில்லை. வைரஸ்தாக்கும் முன்பாக எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நிமிடமும் உயிர் பயத்துடனேயே வாழ்ந்து வருகிறோம். விமானம் இல்லையென்றால் கடல் வழியாக இந்தியா அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கண்ணீர்மல்க கூறுகின்றனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து, எச்.வசந்தகுமார் எம்.பி. அளித்த மனுவில், “கோவிட்19 வைரஸ் காரணமாக ஈரான் மற்றும் இந்தியா இடையேவிமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரானில் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்டு அழைத்துவர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.