எண்ணெய், தயிர், பால் பாக்கெட் போன்ற சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகளுக்கும் தடை விதிக்க அரசு பரிசீலனை- உயர் நீதிமன்றத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை பதில் மனு

எண்ணெய், தயிர், பால் பாக்கெட் போன்ற சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகளுக்கும் தடை விதிக்க அரசு பரிசீலனை- உயர் நீதிமன்றத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை பதில் மனு
Updated on
2 min read

பால் பாக்கெட் போன்ற சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகளுக்கும் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பை, டீ கப் உள்ளிட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் கடந்த 2019 ஜனவரி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது, தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது:

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதையும் மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 52 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உணவகம், நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி, டாஸ்மாக் பார், வழிபாட்டு தலம் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொரித்த கோழி இறைச்சி உணவுகளை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் வைத்து விநியோகம் செய்த 42 உணவகங்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்துக்குள் எக்காரணம் கொண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வந்துவிடாதபடி தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. உணவகம், மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வாடிக்கையாளருக்கு விலையை குறைத்து சலுகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. வழிபாட்டு தலங்கள், விளையாட்டு போட்டிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் கூடும் இடங்களில் உணவு அருந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக தொன்னை, வாழை இலை போன்றவற்றை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பால், தயிர், எண்ணெய் பாக்கெட் போன்ற சீலிட்ட பிளாஸ்டிக் உறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கை ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரியில் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, பால் பாக்கெட் உள்ளிட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த நடவடிக்கையை அரசு தொடங்க வேண்டும். பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை திரையரங்குகளில் திரையிட வேண்டும். டி-ஷர்ட், சூட்கேஸ் போன்ற மாற்றுப் பொருட்களை தயாரிக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தடை, மாற்றுப் பொருட்கள் தயாரிப்பு குறித்து மாணவர்களிடமும் ஆலோசனை கோர வேண்டும். இவ்வாறு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in