Published : 04 Mar 2020 07:00 AM
Last Updated : 04 Mar 2020 07:00 AM

கோவிட்-19 காய்ச்சல் தொற்றை தடுப்பது எப்படி?

புதுடெல்லி

கோவிட் -19 வைரஸ் காய்ச்சல் தொற்றை தடுப்பது குறித்து ஜெர்மனியை சேர்ந்த சீமென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் காரணமாக கோவிட்-19 காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளி தும்மும்போது, இருமும்போது காற்றில் வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. அப்போது அருகில் இருக்கும் நபர்களுக்கும் வைரஸ் காய்ச்சல் தொற்றும் அபாயம் உள்ளது.

ஒருவர் தும்மினால், இருமினால் அவரிடம் இருந்து 2.5 மீட்டர் தொலைவு தள்ளி சென்றுவிட வேண்டும். அந்த நபர் மூகமூடி அணிந்திருந்தால் அருகில் உள்ளவர்களுக்கு வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும்.

இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு முதலில் காய்ச்சலுக்கான எவ்வித அறிகுறிகளும் இருக்காது. இயல்பாகவே செயல்படுவார்கள். ஆனால் அப்போது முதலே அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் கிருமிகள் பரவுகிறது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் சளி திரவத்திலிருக்கும் வைரஸ் கிருமிகள் மற்றும் நோயாளி தும்மும்போது, இருமும்போது காற்றில் பரவும் வைரஸ் கிருமிகள் கதவு கைப்பிடிகள், பேனா, கணினி மவுஸ், டிஜிட்டல் கருவிகள், டம்ளர்கள், மின் தூக்கி பொத்தான்கள், மாடி கைப்பிடிகள் உள்ளிட்ட பொருட்களில் படிகின்றன. இந்தப் பொருட்களில் படியும் வைரஸ் கிருமிகள் 48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கின்றன. இவற்றை யார் தொடுகிறார்களோ அவர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.

எனவே சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். குறிப்பாக விரல் இடுக்குகளை தேய்த்து கழுவ வேண்டும். சந்தேகத்துக்கு உரிய பொருட்களை தொட்டால் 20 விநாடிகள் வரை கைகளை கழுவுவது அவசியம்.

நோயாளி தும்மும்போது, இருமும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். அந்த கைக்குட்டையை உடனடியாக குப்பைத்தொட்டியில் போட்டுவிட வேண்டும். ஒரு முகமூடியை ஒருநாளைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. பல நாட்கள் ஒரே முகமூடியை பயன்படுத்தினால் அதன் மூலமாகவே வைரஸ் தொற்றுஏற்படும். மூகமூடியின் வெளிப்புறத்தை கைகளால் தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால் உடனடியாக சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் காய்ச்சல்பாதிக்கப்பட்டோருடன் எவ்விததொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. நோயாளி பயன்படுத்திய பொருட்களைக் தொடக்கூடாது, பயன்படுத்தக்கூடாது. குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தைகளுக்கு தனித்தனி கைத்துண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

கண், காது, மூக்கை கைகளால் தொடக்கூடாது. இருமல், சுவாசக் கோளாறுடன் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x