

பணி நியமனங்களில் குளறுபடி, தகுதியில்லாத பேராசிரியர்களின் நியமனம், இட ஒதுக்கீடு பின்பற்றாமை உள்ளிட்ட காரணங்களால் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 135 பேராசிரியர்களைப் பணி நீக்கம் செய்ய ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
2007-2010 ஆம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஐந்து புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் குறைந்ததாக முடிவு செய்து மீண்டும் 2012-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. அந்த இணைப்பின்போது, பேராசிரியர்கள், ஊழியர்களின் நியமனம் முறையாக இல்லை என்ற புகார்களின் அடிப்படையில், தமிழக அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அந்தக் குழுவின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார் தனது விசாரணையை முடித்து தமிழக அரசிடம் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பணி நியமனங்களில் குளறுபடி, தகுதியில்லாத பேராசிரியர்களின் நியமனம், இட ஒதுக்கீடு பின்பற்றாமை, பணியிடங்களில் கூடுதல் ஆட்கள் சேர்ப்பு உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி பணி நியமனம் முறையாக இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களைப் பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில், ஆனந்தகுமார் அறிக்கையின் அடிப்படையில் 135 பேராசிரியர்கள், ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், ஆட்சிமன்றக்குழு கூட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.