

பி.காம். படிப்பில் சேர மாணவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் அரசு கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே.சேகர் தெரிவித்தார்.
சென்னை வியாசர்பாடியில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலை - அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வரான (பொறுப்பு) நவமணி, பி.காம் படிப்புக்கு இடம் கொடுக்க மாணவர் ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல்வர் லஞ்சம் கேட்ட காட்சியை மாணவர் தன்னுடைய செல்போனில் பதிவு செய்தார். இது வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்லூரியில் பி.காம். இடத்துக்கு லஞ்சம் கேட்ட முதல்வர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்கக அலுவலகத்தில் மாணவர் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கல்லூரி முதல்வர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ள கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே.சேகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஆதாரத்துடன் புகார்
சம்பந்தப்பட்ட மாணவர் ஆதாரத்துடன் புகார் அளித்தார். விசாரணையில் கல்லூரி முதல்வர் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம்.
அவர் மீது விசாரணை நடந்து வருவதால், அவரை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பொறுப்பில் இருந்து பணியிறக்கம் செய்துள்ளோம். அவரை இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை. அவருக்குப் பதிலாக மற்றொரு பேராசிரியர் கல்லூரியின் முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.