Last Updated : 03 Mar, 2020 08:50 PM

 

Published : 03 Mar 2020 08:50 PM
Last Updated : 03 Mar 2020 08:50 PM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இழுத்தடிக்கப்படும் ரூ.340 கோடி செலவிலான குடிநீர் திட்டப்பணிகள்: ஊரக குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தொடங்கப்பட்ட ரூ.340 கோடி செலவிலான குடிநீர் திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்து கொண்டிருப்பதால் நூற்றுக்கணக்கான ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கச் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கும் தாமிரபரணியிலிருந்து குடிநீர் கிடைத்து வருகிறது. பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கும் குடிநீர் திட்டங்களுடன் அவ்வப்போது புதிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளும் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 3 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் முழுமைபெறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்பணிக்கான உத்தரவும் 27.8.2013-ல் வழங்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 170 ஊரக குடியிருப்புகள் பயனடையும் வகையில் மேலக்கல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.32.40 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருந்தது.

இதற்கான பணி உத்தரவு 27.8.2013-ல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பணிகள் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவுபெறவில்லை.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தாமிரபரணியை நீராதாரமாக கொண்டு பாப்பாக்குடி, கீழப்பாவூர், ஆலங்குளம், மானூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 147 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.31.32 கோடியில் கடந்த 2013-ல் தொடங்கப்பட்டது.

இப்பணிக்கான உத்தரவும் 27.8.2013-ல் வழங்கப்பட்டிருந்தது. இப்பணிகளும் முடிவுபெறவில்லை.

இதுபோல் பாப்பாக்குடி, கடையம் மற்றும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 163 ஊரக குடியிருப்புகள் மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சிக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.46.55 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இப்பணிகள் முடிவுறவில்லை என்பதால் வரும் கோடையிலும் குடிநீர் கிடைக்காமல் 163 ஊரக குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படும் நிலையுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.230 கோடியில் 4,95,000 பேர் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் திட்டத்துக்கு கடந்த 27.1.2014-ம் தேதி அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இப்பணிகள் நிறைவேறும்போது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்துக்கான பணிஆணை கடந்த 13.10.2016-ல் வழங்கப்பட்டிருந்தது. இப்பணிகளும் முழுமை பெறாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

பலகோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, திருநெல்வேலி மாநகராட்சிக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளில் இதுவரை 84 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற 3 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளில் இதுவரை 88 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த திட்டப்பணிகளை இம்மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x