கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா ஏற்பாடு: பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகள் ஆய்வு

பாம்பனில் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்யும் மீன்வளத்துறை அதிகாரிகள்
பாம்பனில் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்யும் மீன்வளத்துறை அதிகாரிகள்
Updated on
1 min read

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவுக்கு, பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் வருகின்ற மார்ச் 06 மற்றும் மார்ச் 07 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பதிவு செய்த பக்தர்கள் ராமேசுவரத்தில் உள்ள கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளர் தேவசகாயம் தலைமையில் செல்கின்றனர்.

இதற்காக 77 விசைப்படகுகளும், 25 நாட்டுப் படகுகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் பயணம் செய்வதற்காக 3,004 பயணிகள் பதிவு செய்துள்ளனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கச்சத்தீவு விழாவிற்குச் செல்ல விண்ணப்பித்த நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து தடையின்மைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்குச் செல்ல அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பொருட்கள், பீடி, சிகரட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்காக பயன்படுத்தப்படவுள்ள படகுகளின் உரிமம் மற்றும் காப்பீடு குறித்த விவரங்களை ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்கநர் பிரபாவதி தலைமையில் அதிகாரிகள் ராமேசுவரத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் ஆய்வில் பாம்பனில் உள்ள நாட்டுப் படகுகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு, படகுளின் நீளம், படகுகளின் இயந்திரங்கள் திறன், பயணம் செய்ய ஏதுவான அம்சங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

எஸ்.முகம்மது ராஃபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in