

கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்காமல் அறநிலையத் துறை அதிகாரிகள் இருப்பதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஹெச்.ராஜா இன்று (மார்ச் 4) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்து அறநிலையத் துறை என்பது இந்து மத அறம் அழிக்கும் துறையாக கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோயில் நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? தேவாலயங்கள், மசூதிகளில் வெறும் 6 ஏக்கரை அரசு தொட முடியுமா? கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்து மத உணர்வாளர்கள் ஒன்றிணைய வேண்டும்.
அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் அனைத்து சொத்துகளும் 6 வார காலத்திற்குள் பட்டியலிட்டு, கோயிலின் நேரடி நிர்வாகத்தில் எவை இருக்கின்றன, எந்தெந்த கோயில் சொத்துகள், நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன, எந்தெந்த கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என, 2018-ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஆனால், 2 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று வரை கொடுக்கவில்லை. எதற்கு அறநிலையத் துறையில் இத்தனை அதிகாரிகள்? ஆனால், மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். கோயில் நிலங்களை ஆக்கிரமிக்காமல் பார்ப்பதுதானே அவர்களின் வேலை. ஒரு துறையே இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறது" என தெரிவித்தார்.