Published : 03 Mar 2020 12:02 PM
Last Updated : 03 Mar 2020 12:02 PM

தமிழக கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயற்சி? - உயிரும் உணர்வும் அற்ற புராதன சின்னங்களாக மாறிவிடும்; ராமதாஸ்

தமிழக கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (மார்ச் 3) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமைவாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழகத்திலுள்ள பல கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய பெருமைமிக்க கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை என்ன காரணத்திற்காக மத்திய தொல்லியல் துறையிடம் தாரை வார்க்க மத்திய அரசு துடிக்கிறது என்று தெரியவில்லை. இந்த தகவலை வெளியிட்ட மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், அதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை.

தமிழக கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கோயில்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அப்பட்டமான இந்த கலாச்சார படையெடுப்பை அனுமதிக்க முடியாது.

வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது என்பது அக்கோயிலை மூடுவதற்கு ஒப்பானதாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வழிபாடு நடத்த முடியும்; கோயில்களில் திருப்பணி செய்வது என்றாலும், பக்தர்களின் வசதிக்காக ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செய்ய முடியும்.

ஆனால், கோயில் நிர்வாகம் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது என்றால், அதன்பின் கதவுக்குக் கூடுதலாக ஒரு பூட்டுப் போடுவது என்றால் கூட டெல்லி வரை சென்று அனுமதி வாங்கித் தான் செய்ய முடியும்.

அதுமட்டுமின்றி, கோயிலுக்குள் பக்தர்கள் சென்று வருவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பக்தர்களின் வருகை கிட்டத்தட்ட முற்றிலுமாக குறைந்துவிடும். இது கோயில்களில் பாரம்பரியத்தையும், புகழையும் சிதைத்துவிடும்.

இந்து கோயில்களின் பெருமையே அவற்றின் புனிதம் தான். மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றால் கோயில்களின் புனிதம் கெட்டு, அவை சாதாரண கட்டிடங்களாகி விடும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை உயிரும், உணர்வும் மிக்க வழிபாட்டு தலங்களாக திகழும் கோயில்கள், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு சென்றவுடன் உயிரும், உணர்வும் அற்ற புராதன சின்னங்களாக மாறிவிடும். இது தடுக்கப்பட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை, தமிழக தொல்லியல் துறை ஆகியவற்றை விட மத்திய தொல்லியல் துறையால் தமிழக ஆலயங்களை சிறப்பாக பராமரிக்க முடியாது. தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம், செஞ்சி தேசிங்கு ராஜன் கோட்டை, திருவண்ணாமலை கந்தாசிரமம் ஆகியவை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற பிறகு அவற்றின் பராமரிப்பு மிகவும் மோசமாகிவிட்டது உண்மை.

தமிழகத்தில் மீதமுள்ள கோயில்கள் சிறந்த பராமரிப்புடனும், பக்தர்கள் வருகையுடனும் உயிரோட்டமாகத் திகழ வேண்டுமானால் அவை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும்.

இந்தியாவில் ஏதேனும் கோயில்கள் பெருமையுடனும், புகழுடனும் இருந்தால் அந்தக் கோயில்களை தங்கள் வசமாக்கிக்கொள்வது மத்திய தொல்லியல் துறையின் வாடிக்கையாகி வருகிறது. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தை மத்திய தொல்லியல் துறை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவித்து அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அதனால் அந்தக் கோயிலின் வழக்கமான வழிபாட்டு முறைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாண்டு கால அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்த கோயில் மத்திய தொல்லியல் துறையிடமிருந்து 2005-ம் ஆண்டில் மீட்கப்பட்டு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தான் அந்தக் கோயிலுக்கு அதன் பழைய பொலிவும், பெருமையும் திரும்பக் கிடைத்தது.

கடந்த 2018-ம் ஆண்டில் கூட திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடிவு செய்த மத்திய தொல்லியல் துறை, அதை வலியுறுத்தித் திருப்பதி கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதன் முடிவை திரும்பப் பெற்றது.

இப்போது அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள கோயில்களை கையகப்படுத்த தொல்லியல் துறை துடிப்பது நியாயமல்ல. தமிழகத்திலுள்ள கோயில்களை கையகப்படுத்தும் திட்டம் தொல்லியல் துறைக்கு இருந்தால், அதை கைவிட வேண்டும். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x