இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து: விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸ் முன் கமல் நேரில் ஆஜர்

கமல்ஹாசன்: கோப்புப்படம்
கமல்ஹாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

'இந்தியன்-2' படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பான மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு நடிகரும் மகக்ள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் ஆஜரானார்.

சென்னை பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் 'ஈவிபி பிலிம்சிட்டி'யில், கமல்ஹாசன் நடித்துவரும் 'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு தளத்தில் கடந்த 19-ம்தேதி இரவு நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். படப்பிடிப்புக்கு செட் அமைத்த நிர்வாகிகள், கிரேனை வாடகைக்கு விட்ட உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இயக்குநர் சங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, கடந்த பிப்.27-ம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 3) சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கமஹாசன் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம், துணை ஆணையர் நாகஜோதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in