Published : 03 Mar 2020 10:44 AM
Last Updated : 03 Mar 2020 10:44 AM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத்தை திருத்துவோம்- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி

விருத்தாசலம்

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கடலூரில் கூறினார்.

இது தொடர்பாக அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியுரிமைச் சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும் அதில் ஏராளமான மாற்றங்களை பாஜக கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை ஒன்றொன்றுக்கு தொடர்புடையவை. இதன் மூலமாக குறிப்பிட்ட சிலரை இந்திய குடிமகன் கள் இல்லையென அறிவித்து வெளியேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்டத்தால் அஸ்ஸாமில் 19 லட்சம் பேர் குடியுரிமையை இழந்துள்ளனர்.போராட்டங்கள் வலிமைப் பெறும் போது சட்டங்கள் திரும்பப் பெறப்படும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம்.பீகார், மேற்குவங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களை என்ன செய்தார்கள். ஆனால் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், தமிழக அரசை மத்திய அரசு கலைத்து விடும் என்று பாஜக நிர்வாகி எச்.ராஜா ஒரு பேட்டியில் கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.

இதில் அதிமுக கருத்து தெரிவிக்காமல் மவுனம் காப்பதேன்? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ பதிவிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அக்கட்சியின் தலைவர் சீமான் மக்களிடையே வெறுப்பு அரசியலை பரப்பி வருவதன் விளைவே இது போன்ற வீடியோக்கள். பொதுமக்களை அடையாளம் தெரிந்துக் கொள்ள ஆதார் போதுமானது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு, ஏழை, நடுத்தர மக்களும் கடுமையான பாதிப்பினை சந்திப்பார்கள் என்று தெரிவித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன்,நிர்வாகிகள் வேலுசாமி, கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x