

கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்; அந்த ரோஜா வேறு, இந்த ரோஜா வேறு என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை, பாரிமுனையில் நேற்று (மார்ச் 2) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து, "தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுக சிதறும் என்றனர். ஆனால், முன்பை விட வலிமையாகியிருக்கிறது.
தலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடக் கூடாது. ரோஜா மலரை மற்றொரு ரோஜா மலருடன் கூட ஒப்பிடக் கூடாது. அந்த ரோஜா வேறு. இந்த ரோஜா வேறு. தலைவர் கருணாநிதி வேறு உயரம். மு.க.ஸ்டாலின் வேறு உயரம். இரண்டும் வெவ்வேறு சிகரம்.
சாதியால், மதத்தால், கட்சிகளால்,. கார்ப்பரேட் நிறுவனங்களால் தமிழ்நாடு துண்டாடப்பட்டிருக்கிறது. காலம் மாறிவிட்டது. தமிழ் இனம் மேம்பட வேண்டும் என்ற ஆதங்கத்தால் கொட்டித் தீர்க்கிறேன். சர்வதேச கலாச்சாரம் உலகமயமாதல் வழியே நம் வீட்டுப் படுக்கையறையில் குதித்துள்ளது.
தலைவர் கருணாநிதி ஒரு கையில் கத்தி சுழற்றி இரு பக்கங்களில் சண்டையிட்டார். இன்று போர்க்களம் அதிகமாகிவிட்டது. எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தலைவனாக இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இயங்க வேண்டும்.
தலைவர் கருணாநிதியின் குடும்பம் குறித்து எனக்குத் தனிப்பட்ட இரக்கம் உண்டு. ஏனென்றால், தமிழக அரசியலில் தலைவர் கருணாநிதியின் குடும்பத்தைப் போல அதிகம் துன்புற்ற குடும்பம் ஏதும் இல்லை என கருதுகிறேன். அவரது குடும்பத்தினர் பல அவமானங்களைத் தாங்கியிருக்கின்றனர்.
கருணாநிதி ஒன்றை சொல்லிவிட்டு செய்து முடிப்பார். ஸ்டாலின் செய்து முடித்துவிட்டு சொல்லிக் கொடுப்பார். திமுக தன்னுடன் அமைத்துக்கொள்ளும் கூட்டணி வலிமையாக அமைந்தால் ஸ்டாலினுக்குத் தான் சிம்மாசனம்" என தெரிவித்தார்.