

நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகும் போலீஸார் உடை கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிப். 2 முதல் 3 மாதங்களுக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் பொதுநல மனுக்கள், ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர்.
பல்வேறு பொதுநல வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களுக்கு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில் வழக்கறிஞரின் பெயர், கையொப்பம், தேதி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இல்லை. இதனால் அந்த பதில் மனுக்களை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பின்னர், அரசு வழக்கறிஞரின் பெயர், கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் அரசு தரப்பில் தாக்கல் செய்யும் பதில் மனுக்களை ஏற்கக்கூடாது எனப் பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆட்கொணர்வு வழக்கில் மதுரை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது நீதிமன்றத்தில் காவல் துறை அதிகாரிகள் ஆஜராகும்போது எப்படிஉடை அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுபாட்டை பெத்துராஜ் பின்பற்றவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் போலீஸார் முறையான உடை கட்டுப்பாட்டுடன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.