

மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் திமுக மீது காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
வேட்புமனு தாக்கல் தொடங்கவே 5 நாட்கள் இருக்கும் நிலையில் திமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பது, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸை அதிருப்தி அடைய வைத்துள்ளது. காங்கிரஸைப் பொறுத்தவரை கடந்த 2011 முதலே திமுகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு வருகிறது.
2011 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு 23, காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்களே கிடைத்தனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கான எண்ணிக்கை திமுகவிடம் இல்லை.எனினும், 2013-ல் கனிமொழி, 2014-ல் திருச்சி சிவா ஆகியோர் காங்கிரஸ் ஆதரவுடன்தான் மாநிலங்களவை உறுப்பினராகினர்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. கடந்த 2016-ல்நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, 2019-ல் எம்.சண்முகம், பி.வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
ஒவ்வொரு முறையும் மாநிலங் களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்கும் போதெல்லாம் அடுத்த முறை தருகிறோம் என்று திமுக தலைமை சமாதானப்படுத்தி வந்தது.
கடந்த 2019-ல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொடுத்துவிட்டதால் காங்கிரஸ் சமாதானம் அடைந்தது. ஆனால், இந்த முறை வெற்றி வாய்ப்புள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும் திமுகவே எடுத்துக் கொண்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திமுக அதிரடியாக 3 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸார் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற பலமுறை காங்கிரஸ் உதவியுள்ளது. கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர்காங்கிரஸ் ஆதரவு இல்லாவிட்டால் அன்றைய சூழலில் மாநிலங்களவை உறுப்பினராகி இருக்க முடியாது. ஆனால், இப்போது வாய்ப்பு இருந்தும் காங்கிரஸுக்கு ஒரு இடம் கொடுக்க திமுகவுக்கு மனமில்லை.
இது தொடர்பாக திமுக தலைமையிடம் தமிழக காங்கிரஸ் பேச்சு நடத்தியது. அடுத்தமுறை தருகிறோம் என்று கறாராக கூறிவிட்டனர். அடுத்து 2022 ஜூனில்தான் மாநிலங்களவைத் தேர்தல் நடக்கும். அதில், 2021 தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள்தான் வாக்களிக்க முடியும். அப்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதெல்லாம் தெரியாது. எதையாவது கூறி காங்கிரஸை திமுக ஏமாற்றி வருகிறது’’ என்றார்.
காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறும்போது, ‘‘மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக தராதது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் முறையிட தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மாநிலங்களவையில் காங்கிரஸின் பலம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து ஒரு இடம் கிடைத்தால் காங்கிரஸுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே, திமுக தலைவர் ஸ்டாலினிடம் விரைவில் சோனியா காந்தி பேச வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
மாநிலங்களவை தேர்தலால் திமுக - காங்கிரஸ் உறவில் உரசல் தொடங்கியுள்ளது.
முஸ்லிம்களும் அதிருப்தி
தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக சார்பில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் எம்.பி.க்களாகஇல்லை. கடந்த 2019-ல் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.வில்சனுக்கு திமுக வாய்ப்பு அளித்தது. அதுபோல இந்த முறை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை திமுக மாநிலங்களவைக்கு அனுப்பும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த முறையும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம்கள், குறிப்பாக திமுகவில் உள்ள முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.