Published : 03 Mar 2020 08:16 AM
Last Updated : 03 Mar 2020 08:16 AM

2016 விஏஓ தேர்விலும் முறைகேடு; இடைத்தரகர் ஜெயக்குமார் உட்பட 2 பேருக்கு 3-வது முறையாக போலீஸ் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி

இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகிய இருவரைவும் 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்துவிசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப்-4 தேர்வில் இடைத்தரகராக செயல்பட்டதாக ஜெயக்குமார், மோசடிக்கு உதவி செய்ததாக டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 2018-ம் ஆண்டு நடந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளிலும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 18-ம் தேதி 2-வது முறையாக கைது செய்யப்பட்டனர். 2 முறை கைது செய்து, 2 முறை காவலில் எடுத்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த இருவரும் 2016-ம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் மோசடி செய்திருப்பது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 2 பேர் மீது மீண்டும் வழக்குகள் பதிவு செய்து 3-வது முறையாக அவர்களை கடந்த 27-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முழுமையான தகவல்களை பெறுவதற்கு, 7 நாட்கள் காவலில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x