Published : 03 Mar 2020 08:14 AM
Last Updated : 03 Mar 2020 08:14 AM

புதிய மென்பொருள், சர்வர் பிரச்சினையால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்- குறைபாடுகளை சீரமைக்க கோரிக்கை

இணையதளம் வாயிலாக சம்பளப்பட்டியல் தயாரிக்கும் மென்பொருள் மற்றும் சர்வர் பிரச்சினையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிப்ரவரி மாத சம்பளத்தை பெறுவது காலதாமதமாகி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரைஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் என 18 லட்சம் பேருக்கு மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த சம்பள கணக்கு அலுவலர், மாதா மாதம் 20-ம் தேதி சம்பள கணக்குப் பட்டியலை தயாரித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளசார் கருவூலங்களுக்கு அனுப்பி வந்தனர். இந்த சம்பளப் பட்டியலானது, தேசிய தகவல் மையத்தால் தயாரிக்கப்பட்ட ‘பே-ரோல்’ எனப்படும் மென்பொருள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாடு என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக அரசுஅறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ், அனைத்து அரசு ஊழியர்களது விவரங்கள், பணிப்பதிவேடுகள் உள்ளிட்டவை மின்னணுமயமாக்கப்பட்டன. இதற்கான மென்பொருளை விப்ரோ நிறுவனம் தயாரித்து அளித்ததுடன், சம்பள கணக்குகளை கையாளும் ஊழியர்களுக்கு பயிற்சியையும் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, சம்பளக் கணக்கு பட்டியலையும் இணையதளம் மூலம் கருவூலங்களுக்கு அனுப்பி ஊழியர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக, சென்னை தலைமைச் செயலகம் மற்றும் தேனி, கரூர் மாவட்டங்களில் முதல்கட்டமாக இத்திட்டம் அமலானது. தொடர்ந்து சென்னை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இத்திட்டம் மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சர்வர் பிரச்சினை, சம்பள கணக்கு பட்டியலை இணையதளத்தில் தயாரித்தல் உள்ளிட்டவற்றால் பிப்ரவரி மாதம் சம்பளத்தை பெறுவதில் அரசு ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலக ஊழியர்கள் கூறியதாவது: இத்திட்டத்தை முதலில்பரீட்ச்சார்த்தமாக செயல்படுத்தியபோதே சம்பளக் கணக்கு தயாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. மென்பொருளில் ஒரு நிலையில் இருந்து இறுதி நிலைக்குசம்பளப் பட்டியல் செல்வதில் இடர்ப்பாடு இருந்தது. அவ்வப்போது மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தினர் வந்து சரிசெய்து வந்தனர். வழக்கமாக மாதம் 20-ம்தேதி சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கருவூலங்களுக்குச் சென்றுவிடும். இம்முறை விடுப்பு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு சம்பளக் கணக்கு தயாரிக்கப்பட்டுஅனுப்பப்படுகிறது. இதனால், ஒருசில துறை ஊழியர்களுக்கு சம்பளம் வந்துவிட்டது. மற்றவர்களுக்கு தாமதமாகிறது.

மாதா மாதம், சம்பளத்தில் வீட்டுக்கடன், பொருட்கள் வாங்கிய கடன் என கடன் தொகைகள் முதல் வாரத்தில் செலுத்த வேண்டியது வரும். இந்நிலையில், தற்போது அதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முழுமையாக இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சீரமைத்து அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x