Published : 03 Mar 2020 07:48 AM
Last Updated : 03 Mar 2020 07:48 AM

கோயில் நிலங்களில் வசிக்கும் நிலமற்ற எளியோருக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணை மூலம் 19,627 குடும்பங்கள் பயன்பெறும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்

சென்னை

கோயில் நிலங்களில் வசிக்கும் நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணை மூலமாக 19,627 குடும்பங்கள் பயன்பெறும் என்றும், இதற்காக 0.125 சதவீத கோயில் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் வகையில் கடந்த ஆண்டு ஆக. 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்துராதாகிருஷ்ணன் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஸ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே நீண்டகாலமாக அந்த இடங்களில் வசிக்கும் நிலமற்ற, வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் 19,627 ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும். இவர்கள் ஏற்கெனவே கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அந்த இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். வீட்டுமனைப் பட்டா இருந்தால் மட்டுமே வீடு கட்டுவதற்கான மத்திய அரசின் நலத் திட்டங்களை இவர்களால் பெற முடியும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 600 முதல் 700 சதுர அடி என கணக்கீடு செய்யப்பட்டு 600 ஏக்கர் நிலம் மட்டுமே இதற்காக கையகப்படுத்தப்படும். இது தமிழகம் முழுவதும் உள்ள மொத்த கோயில் நிலங்களில் வெறும் 0.125 சதவீதம் மட்டுமே.

இந்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை விட 3 மடங்கு கூடுதலாக இழப்பீட்டுத் தொகை, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும். மேலும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் ஆட்சேபணையில்லா சான்று பெற்ற பிறகே இந்த அரசாணைப்படி நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். எனவே இந்த அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு, மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் மார்ச் 16-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x