

ராமேசுவரத்திலிருந்து சென்னை வரையிலும் ஆட்டோ மூலம் பயணித்து விதைப் பந்துகளை விதைத்து மரங்களை வளர்க்கும் முயற்சியினை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தொடங்கி உள்ளார்.
ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சார்ந்த எம்.பி.ஏ முதுகலை பட்டதாரி சாகுல் ஹமீது (30). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் மரம் வளர்த்தலின் அவசியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தனது ஆட்டோவில் சென்று பிரச்சாரம் மேற்கொள்வதுடன் விதைப் பந்துகளைத் தூவி மரங்களையும் நட்டு வருகின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இச்சேவையை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலாமின் நினைவிடத்தில் ஆரம்பித்து சென்னையை 10 நாட்களில் அடையும் பயணத்தை அவர் தொடங்கினார்.
வழியில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து அவர்களிடம் 20,000 விதைப் பந்துகளைக் கொடுத்து மரங்களை வளர்க்க ஊக்குவிக்கும் முயற்சியினை முன்னெடுத்துள்ளார்.
இதற்கான நிகழ்ச்சி ராமேசுவரத்தில் கலாம் பயின்ற நம்பர் 1 துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது. அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலிம் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
தனது பயணம் குறித்து சாகுல் ஹமீது கூறுகையில், "ராமேசுவரத்தில் இருந்து இன்று (மார்ச் 02 திங்கட்கிழமையன்று) ஆட்டோ மூலம் புறப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை, மதுரை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சி, முசிறி நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சுமார் 1, 500 கிலோ மீட்டர் பயணம் செய்து சென்னையை மார்ச் 12-ல் சென்றடைகிறேன்.
இந்தப் பயணத்தின் போது வழியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களைச் சந்தித்து மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவடன் அவர்களுக்கு விதைப் பந்துகளைக் கொடுத்து மரங்களை வளர்க்க ஆர்வத்தை ஏற்படுத்தவிருக்கிறேன். மேலும் சாலைகளில் செல்லும் போது ஆங்காங்கே ஆட்டோவை நிறுத்தி விதைப் பந்துகளை வீசவுள்ளேன்.
இந்த விதைப் பந்தில் வேம்பு, புங்கை, சொர்க்கம், இயல்வாகை ஆகிய நான்கு வகையான மரங்களின் விதைகள் உள்ளன.
முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் ராமநாதபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும் 6000 விதைப் பந்துகளை தூவி விதைத்துள்ளேன்" என்றார்.