வார்டுகள் மறு வரையறை குறித்து வரும் 10-ம் தேதி குற்றாலத்தில் கருத்து கேட்பு: ஆட்சியர் தகவல்

வார்டுகள் மறு வரையறை குறித்து வரும் 10-ம் தேதி குற்றாலத்தில் கருத்து கேட்பு: ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

வார்டுகள் மறு வரையறை குறித்து வரும் 10-ம் தேதி குற்றாலத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் மறு வரையறை தொடர்பான முன்மொழிவுகள் கடந்த மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் இருந்து 22-ம் தேதி வரை கருத்துகள் பெறப்பட்டன. பின்னர், 25-ம் தேதி மக்கள் பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் கருத்துகள் பெறப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக வார்டுகள் மறு வரையறை செய்யும் பணிகள் தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட முன்மொழிவுகள் மீது சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அவற்றுக்கு தீர்வு காண வருகிற 10-ம் தேதி மாலை 3 மணியளவில் குற்றாலம் சமுதாயநலக் கூடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in