

தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்டங்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணிகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.
ஆய்வின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பாரம்பரிய மிக்க மதுரை மாவட்டத்தில் தான் முதலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முதல்வர் கே.பழனிச்சாமி தொடங்கினார். பின் 32 மாவட்டங்களுக்கும் சென்று கோடிக்கணக்கான ரூபாய் நலத்திட்டங்களை லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கினார்.
அதன்பின் மதுரை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம் கட்ட 110-விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி மதுரைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம் கட்ட முதற்கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ரூ.10 கோடியில் பணி நடந்துள்ளது. கட்டிடப் பணி முழுமையடைந்ததும் முதல்வர், துணை முதல்வர் விரைவில் திறந்து வைப்பார்" என்றார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி பதவிக்கு திமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு, இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது அதிமுகவில் வேட்பாளர் எப்படி அறிவிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பேசியபோது, "வருவாய் நிர்வாக ஆணையராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் மக்கள் மகிழ்ச்சியோடு வந்து அரசு திட்டங்களை பெற்றுச்செல்ல வேண்டும் எனப் பணியாற்றி வருகிறார்.
வருவாய்த்துறையில் நிர்வாக வசதிக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என்ற குறை உள்ளது.
மதுரை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா வழங்குதல் இன்னும் நாம் இலக்கை அடையவில்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக வருவாய்த்துறையினர் வழங்க வேண்டும்.
ஒரு மாதம் கழித்து ஆய்வு செய்யும்போது, மக்கள் கோரிக்கை மனுக்கள் நிலுவையில் இருக்கக் கூடாது. நலத்திட்டங்கள் வழங்குவதில் மதுரை மாவட்டம் சாதனை படைக்க வேண்டும்" என்றார்.
ஆய்வின்போது பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் ஜெகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உதவி ஆட்சியர்(பயிற்சி) ஜோதி சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.