பணியைப் பளுவாக நினைக்காமல் சேவையாக நினைத்துப் பணியாற்றுங்கள்: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரை

பணியைப் பளுவாக நினைக்காமல் சேவையாக நினைத்துப் பணியாற்றுங்கள்: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரை
Updated on
1 min read

பணியை பளுவாக நினைக்காமல் சேவையாக நினைத்து பணியாற்றுங்கள் என வருவாய்த்துறையினருக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், "பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள நலத்திட்டங்களை செய்யும் பணி வருவாய்த்துறையிடம் உள்ளது. அதனால் வருவாய்த்துறையினர் மக்களை அலையவிடாமல் பணிகளை செய்து கொடுக்க வேண்டும்.

முதல்வரின் குறைதீர்க்கும் மனு முகாமில் 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 51 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வழங்கப்படும் 31 லட்சம் முதியோர் உதவித்தொகையில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 1.39 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது.

முதியோர் உதவித்தொகை பெற தற்போது தகுதியாக ஆண்டு வருமானத்தை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாகவும், ஆண் வாரிசு இருந்தாலும் ஏழ்மையாக இருந்தால் வழங்கலாம் என முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதேபோல் பார்த்தாலே தெரியும் வகையில் உள்ள தகுதியான, வறுமையில் உள்ள விதவைகள், முதியோர்களுக்கு நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா கோரி வழங்கப்பட்டுள்ள பழைய மனுக்களை 30 நாட்களுக்குள் மீண்டும் ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு வழங்கலாம்.

அரசு திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பட்டாதாரர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கி, மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கான நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் மதுரைக்கு விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவை கிடைக்கும். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.1360 கோடி பேரிடர் மேலாண்மைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது.

வருவாய்த்துறை அலுவலகங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். அலுவலகத்தை பெயிண்டிங் செய்து, சுவற்றில் நலத்திட்டங்களை பொதுமக்கள் பார்வைக்கு எழுதி வைக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி விஏஓ அலுவலகம் கட்டப்படும். வருவாய்த்துறையினர் பணியை பளுவாக நினைக்காமல் சேவையாக நினைத்து பணியாற்றுங்கள்" என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உதவி ஆட்சியர்(பயிற்சி) ஜோதி சர்மா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in