தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடிவாங்கியும் நேர்த்திகடன்: திண்டுக்கல்லில் 13 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கோயில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் நடந்த கோயில் விழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பூசாரி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் நடந்த கோயில் விழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பூசாரி.
Updated on
1 min read

கொடைரோடு அருகே 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடிவாங்கியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ளது ஜெ.ஊத்துப்பட்டி கிராமம். இங்கு ஸ்ரீமாலம்மாள் கோயில் மாசித்திருவிழா 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். விழா நடந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. ஸ்ரீமாலம்மன், ஸ்ரீசென்னப்பன், ஸ்ரீகருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் மாலம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டாம்நாள் விழாவில் சென்னப்பன்சுவாமி சப்பர ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் இறுதிநாளில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு வரிசையாக அமரவைக்கப்பட்டனர். கோயில் பூசாரி இவர்களின் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றிவைத்தார்.

இதையடுத்து பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கியும் பல பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் அடுத்த திருவிழா 13 ஆண்டுகள் கழித்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in