

திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கும், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ-வான குணசேகரனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். சென்னையில் மாவட்ட வாரியாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆனந்தனுக்கு எதிராக புகார் வாசிக்க எழுந்தாராம் குணசேகரன். ஆனால், அவரை கையைக்காட்டி அமர்த்தி பேசவிடாமல் தடுத்துவிட்டாராம் முதல்வர். இந்த நிலையில், திருப்பூர் நகரில் ஆனந்தனும் குணசேகரனும் ஆளுக்கொரு தினுசில் அம்மா பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். திருப்பூர் மாநகரில் 10 இடங்களில் லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தார் ஆனந்தன். இதற்கு போட்டியாக அதே நாளில் மாநகரின் பல இடங்களில் பிரியாணி விருந்து போட்டு கலக்கினார் குணசேகரன். இதையெல்லாம் வேடிக்கையாய் பார்த்துச் சிரிக்கும் அதிமுகவினர், “இந்த ஏட்டிக்குப் போட்டி அரசியல் எங்குபோய் முடியப்போகிறதோ” என்று புலம்புகிறார்கள்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 8, 2020)