Published : 02 Mar 2020 03:18 PM
Last Updated : 02 Mar 2020 03:18 PM

இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் என்ன? - மீன்வளத்துறை இயக்குநர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மறுவாழ்வு குறித்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக மீன்வளத்துறை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மீனர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஏற்கெனவே நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "மீனவர்கள் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில், வழக்கமாக வழங்கப்படும், 184 கோடியே 93 லட்சம் ரூபாயுடன், 300 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன் பிடித்தல் உதவி எனும் பெயரில் பாரம்பரிய மீனவர்களுக்கு உதவியாக மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ், இலங்கை அரசால் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, தமிழக அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014-ம் ஆண்டு மே முதல் இதுவரை, இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.

மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை மற்றும் இந்தியா இடையில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடைசியாக 2017 அக்டோபர் மாதம் கூட்டம் கூட்டப்பட்டது.

படகுகள் மூலம் மீன்பிடிக்கும் நடைமுறையை ஆழ்கடல் மீன்பிடிக்கும் கப்பல்களாக மாற்றும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேளாண் துறையை மத்திய அரசு கேட்டுள்ளது.

மத்திய அரசு, 2018 -19 ஆம் நிதியாண்டு முதல் அனைத்துக் கடலோர மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், படகுகளை ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களாக மாற்றுவதற்கு ஒரு கப்பலுக்கு 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (மார்ச் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மதனகோபால் ராவ், ''மீனவர்களின் மறுவாழ்வுக்காக நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு ரூ.300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது'' என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு வழக்கறிஞரிடம், "மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த வழக்கில் 2 ஆண்டுகளாகியும் ஏன் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே, பாதிக்கபட்ட மீனவர்களுக்கான நிவாரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மீன்வளத்துறை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 16-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x