ரஜினி-கமல் இணைந்தால் '16 வயதினிலே' மாதிரி நல்ல படம் கிடைக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார் - கமல்
ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார் - கமல்
Updated on
1 min read

ரஜினி-கமல் இணைந்தால் '16 வயதினிலே' மாதிரியான நல்ல படம் கிடைக்கலாம் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் அரசு முறைப் பயணமாக, இன்று (மார்ச் 2) சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சிஏஏவால் முஸ்லிம்கள் பாதிப்படைவார்கள் என்ற அச்சம் நிலவுகிறதே?

சிறுபான்மையின மக்களின் முழு இதயத்துடிப்பாக தமிழக அரசும் அதிமுகவும் இருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேல் தமிழக அரசு பாதுகாப்பை உறுதி செய்கிறது.

அரசியலில் ரஜினி-கமல் இணைந்து செயல்படுவார்கள் என்ற பேச்சு உலவுகி்றதே?

ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினியும் கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுக என்கிற குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். தலைவருக்குப் பிறகு கட்சி அழிந்துவிடும் என்றனர். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த கட்சியை ஒன்றாக்கி, ஜெயலலிதா கட்சியின் தொண்டர்களை ஒன்றரை கோடியாக உயர்த்தினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சி நிலைக்காது என்றனர். ஆனால், நல்லாட்சி தொடர்கிறது. 2021 தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவுக்குக் கட்சி உச்சத்தில் இருக்கிறது. ரஜினியும் கமலும் அவர்களின் கொள்கை - லட்சியத்தைச் சொல்லட்டும். ஆனால், எங்களின் வாக்கு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது. மீண்டும் அவர்கள் இணைந்தால், '16 வயதினிலே' மாதிரி நல்ல படம் கிடைக்கலாம்.

வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்களை முதல்வர் சந்திக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?

முதல்வர் கிட்டத்தட்ட 3 முறை சந்தித்துப் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இதுகுறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். நானும் வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினரை அலுவலகத்திற்கு அழைத்துப் பேசியிருக்கிறேன். சிஏஏ சட்டத்தால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை. அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என தெளிவுபடுத்தியிருக்கிறோம். சந்திக்கவில்லை என்பது திசை திருப்பும் முயற்சி. முஸ்லிம் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு, போராட்டத்தைக் கைவிட்டு சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

சசிகலா விடுதலையான பிறகு மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என அதிமுக தலைவர்கள் கூறிவருகிறார்களே

அதுதான் கட்சியின் நிலைப்பாடு. நேற்றும் இன்றும் நாளையும் அதே நிலைதான்..

டெல்லியில் உள்துறை அமைச்சரைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா?

இது அரசு ரீதியான பயணம். சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது.

என்பிஆர் தொடர்பாக சில திருத்தங்களை முதல்வர் கோரியுள்ளார். அதற்கு மத்திய அரசு பதில் அளிக்குமா?

அரசு சார்பில் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். நிச்சயம் பதில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in