

வாட்ஸ் அப்பில் பரவிய ரூ.40 கோடி வரி பாக்கி சர்ச்சை குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, மதுரை மாநகராட்சிக்கு ரூ.40 கோடி வரை வரிபாக்கி வைத்துள்ள 100 பெரும் நிறுவனங்கள் பட்டியலை சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர் 'வாட்ஸ் அப்'பில் வெளியிட அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இது தொடர்பாக ஹக்கீம் கூறுகையில், "சாதாரண மக்களிடம் வரி கேட்டு கறார் காட்டும் மாநகராட்சி ரூ.40 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ள 100 பெறும் நிறுவனங்களிடம் மட்டும் வரி கட்டச் சொல்லி நோட்டீஸ் விடக்கூட அஞ்சுகிறது.
அதனாலேயே, அந்தப் பட்டியலை வெளியிட்டேன். அப்பாவி மக்களிடம் ரூ.2 ஆயிரத்திற்காக மல்லுக்கு நிற்கின்றனர். ஆனால், ரூ.40 கோடி வரிபாக்கி வைத்துள்ள 100 பெரும் நிறுவனங்களிடம் மட்டும் வரிபாக்கியை வசூல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
வரிபாக்கியைக் கட்ட அந்த நிறுவனங்களுக்கு தகுதியிருந்தும் அவர்கள் கட்ட ஆர்வப்படவில்லை. அவர்களிடம் கேட்டு வாங்க மாநகராட்சியும் ஆர்வம்காட்டவில்லை என்பதே வருத்தமாக உள்ளது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், வாட்ஸ் அப் செய்தி குறித்தும் சமூக ஆர்வலர் ஹக்கீமின் புகார் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் விசாகன் விளக்கமளித்தார். அப்போது அவர், "மதுரை மாநகராட்சியில் வரிவசூல் பாரபட்சமில்லாமல் நடக்கிறது. வாட்ஸ் அப்பில் வந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் பல நிறுவனங்கள் ஒரளவு வரியைக் கட்டிவிட்டன. மீதமுள்ள வரியையும் வசூல் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்றார்.
மாநகராட்சி மீது மக்கள் புகார்..
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, கடைகள் வாடகை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வகை வருவாய் இனங்கள் வாயிலாக ரூ.207 கோடி வருமானம் கிடைக்கிறது. இதில் சொத்துவரி மட்டும் ரூ.97 கோடி வரை கிடைக்கிறது. அண்மைக்காலமாக சொத்து வரி வசூல் மிக மந்தமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநகராட்சி வரிவசூல் குறித்து மக்கள், "கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி, அரசு தரப்பில் இருந்து சொத்து வரியை வசூலிக்க நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று தடுக்கப்பட்டது. அதனால், மாநகராட்சி தற்போது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட சிரமப்படும் அளவிற்கு நிதி நெருக்கடியி ஏற்பட்டது.
நடுத்தர, ஏழை மக்கள் ஒரளவு சொத்து வரியை கட்டிவிடுகிறார்கள். ஆனால், பெரும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வசதிப்படைத்தோர் சொத்து வரி கட்டாமல் உள்ளனர்.
முன்பு வரி கட்டாவிட்டால் சம்பந்தப்பட்ட கடைகள், வீடுகள் முன்பாகக் குப்பை தொட்டிகளை வைக்கும் கலாச்சாரம் இருந்தது. அப்போதும் கூட கோடிக்கணக்கில் வரிபாக்கி வைத்துள்ள பெரும் நிறுவனங்கள் முன் குப்பை தொட்டிகளை வைக்க மாட்டார்கள். குப்பைத் தொட்டி வைத்தது ஒரு கட்டத்தில் சர்ச்சையாகவிட்டதால் அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை கைவிட்டது.
தற்போது வரிபாக்கி வைத்துள்ள பெரும் நிறுவனங்களிடம் ஒரு விதமாகவும், பொதுமக்களிடம் கடுமையாகவும் வரிவசூலில் மாநகராட்சி பாராபட்சம் காட்டுகிறது" எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.