

ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் பரவி உள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் கொரியாவைத் தொடர்ந்து ஈரானிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பெரும்பாலான வளைகுடா நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் உட்பட 450 இந்திய மீனவர்களை மீட்க வேண்டும் என, கடிதம் மூலம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.
அதில், இந்திய மீனவர்கள் கிஸ் உட்பட ஈரானைச் சுற்றியுள்ள துறைமுகங்களில் தத்தளிப்பதாகவும் ஈரானிலுள்ள இந்தியத் தூதரகம் அந்த மீனவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.
இதே கோரிக்கையை திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தின.
இந்நிலையில், நேற்று (மார்ச் 1) மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், ஈரானில் உள்ள இந்தியர்களை சோதனை செய்து அனுப்பி வைக்க ஈரான் நாட்டு அரசுடன் ஆலோசித்து வருவதாகவும், ஈரானில் உள்ள இந்தியத் தூதருடன் இது தொடர்பாக தொடர்ந்து தகவல் பெற்று வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர் பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரை அப்பதிவில் 'டேக்' செய்துள்ளார்.