

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கத்தக்கது. அவர் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார். பிரதமரும் தமிழக முதல்வரும் அமைதியை நிலைநாட்டும் வேலையைத் தான் செய்துள்ளார்கள்.
தமிழகம் இன்று அமைத்திப் பூங்காவாகத் திகழ்கிறது. அதனால்தான் தமிழகம் சிறந்த மாநிலம் என்ற விருதையும் வாங்கியுள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளால் வடநாட்டு மாணவர்களுக்குத் தான் ஆதாயம் என்று சீமான் சொல்வது ஏற்புடையது அல்ல. நீட் தேர்வு எழுதித் தேர்வாகும் அனைவருமே இதில் பலனடைவர்" என்றார்.
நடிகர் ரஜினிகாந்த், "குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கெனவே கூறியுள்ளனர். எனினும் சில அரசியல் கட்சியினரும் மதத் தலைவர்களும் தங்களின் சுயலாபத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும். சிஏஏ-வால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் எனது குரல் முதலில் ஒலிக்கும்.
இந்தியாவில் வெளிநாட்டவர்கள் யாரேனும் சட்டவிரோதமாக வசிக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) அவசியம்"