

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) காலை தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் மதுரை, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை மாவட்டத்தில் 316 பள்ளிகளைச் சேர்ந்த 17,089 மாணவர்களும், 19,204 மாணவியர் உட்பட மொத்தம் 36,293 பேர் 120 மையங்களில் எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் 220 பேர் சொல்வதைக் கேட்டு எழுதக்கூடிய வகையில் 220 ஆசிரியர்களும், மதுரை மாவட்டத்தில் வழித்தட அலுவலர்கள் 28 பேர், அறைக்கண்காணிப்பாளர்கள் 1910 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வைக் கண்காணிக்கும் வகையில், இணை இயக்குநரும், மாவட்ட தொடர்பு அலுவலர் அருள்முருகன், முதன்மைக் கல்வி அலுவலர் ரா. சுவாமிநாதன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய 10 பேர் தலைமையில் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது.
8.35 லட்சம் மாணவ, மாணவியர்..
தமிழகம், புதுச்சேரியில் இன்று (மார்ச் 2) நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.35 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்வின்போது மாணவர்கள் விடைத்தாளைப் பிரித்து வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது. மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடம் மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுய விவரங்களைச் சரிபார்க்கவும் தரப்படும். அதன்பின் காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை 3 மணிநேரம் மாணவர்கள் தேர்வு எழுதலாம். சிறப்புச் சலுகையாக மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது.