

அருந்ததியர் மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என, மாநிலங்களவை திமுக வேட்பாளர் அந்தியூர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் (அதிமுக - 4, திமுக - 1, மார்க்சிஸ்ட் - 1) பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கு 6 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கையில் "மார்ச் 26-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அந்தியூர் செல்வராஜ் முன்னாள் அமைச்சராவார். என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர், கடந்த 2014-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். கடந்த ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வேட்பாளர் அந்தியூர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது எனக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட பொறுப்பல்ல. நான் சேர்ந்திருக்கும் அருந்ததிய சமுதாய மக்கள் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் எப்படி தவிக்கின்றனர் என்பதை உணர்ந்தவன். அருந்ததிய காலனிகளில் பெண்களுக்குக் கழிவறை வசதி இல்லாமல், மயானம் கூட இல்லாமல் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அவ்ர்களுக்கு என்னால் இயன்ற அளவில் பணியாற்றுவேன்" என தெரிவித்தார்.