

வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் செல்போன் கடைகளில் திருடிய வடமாநில இளைஞர்களின் புகைப்படத்தை காவல் துறையினர் நேற்று வெளியிட்டனர்.
வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் உள்ள பிரபல செல்போன் கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோயின. இதுகுறித்து செல்போன் கடை உரிமையாளர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் காட்பாடி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்போன்கள் திருடுபோன கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செல்போன் கடை ஒன்றில் வடமாநில இளைஞர்கள் உள்ளே நுழைந்து அங்குள்ள செல்போன்களை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
இந்த படங்களை காவல் துறையினர் நேற்று வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் உள்ள வடமாநில இளைஞர்கள் வேலூர், காட்பாடி மற்றும் சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிவது தெரியவந்தால், உடனடியாக வேலூர் மற்றும் காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வேலூர் வடக்கு காவல் நிலையம், காட்பாடி காவல் நிலையம், விருதம்பட்டு காவல் நிலையங்களில் தகவல் கொடுக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறைக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானமும் அளிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.