

திமுக ஆட்சியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அளிப்பதற்காக திருப்பூர் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மர்ம நபர்கள் புகுந்து, தொலைக்காட்சி பெட்டிகளை திருடியதுடன், அதனை உடைத்து உதிரிபாகங்களை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதியில் அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என, திமுக அறிவித்தது. தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, அதே ஆண்டில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தது. இந்தத் திட்டத்தை, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, இத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, திட்டத்தை ரத்து செய்தது. மக்களுக்கு வழங்குவதற்காக வாங்க இருந்த தொலைக்காட்டி பெட்டிகள் வாங்கப்படாது எனவும், வாங்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் ஆதரவற்ற இல்லங்கள், அரசுப் பள்ளிகள், கிராம ஊராட்சிகள் சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், யாருக்கும் வழங்கப்படாமல் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள கட்டிடத்தில், 2011-ம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை பார்த்த போது பாதுகாப்பு கட்டிடத்தின் பின்புறத்தில், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் உடைக்கப்பட்ட நிலையில் வெளியே கிடந்தன. தொலைக்காட்சி பெட்டிகளின் உள்ளிருந்த பாகங்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன. சம்பவ இடத்துக்கு சென்று பள்ளி நிர்வாகிகள் ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் சிலர் அந்த கட்டிடத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து உதிரிபாகங் களைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, '2011-ம் ஆண்டு முதல் இந்த தொலைக்காட்சி பெட்டிகள் இங்குதான் உள்ளன. மாநகராட்சி பள்ளி என்பதால், கட்டிடமும் மாநகராட்சிக்கு சொந்தமானது. ஏற்கெனவே பலமுறை தொலைக்காட்சி பெட்டிகளைத் திருட முயற்சி நடைபெற்றுள்ளது. இதனால், தொலைக்காட்சி பெட்டிகளை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டுமென பலமுறை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், கட்டிடம் மட்டுமே மாநகராட்சிக்கு சொந்தம், தொலைக்காட்சி பெட்டிகள் வருவாய்த் துறையினரின் பொறுப்பு என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விசாரித்தபோதுதான், இது மாநகராட்சியினர் பொறுப்புக்கே வரும் எனத் தெரிகிறது' என்றனர்.
மாநகராட்சி ஆணையர் கே.சிவக்குமாரிடம் கேட்டபோது, 'இது, வருவாய்த் துறையினர் பொறுப்பில்தான் வரும். இருப்பினும், சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரை காவல் நிலையத்தில் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையை மாநகராட்சியிடம் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.