

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு கடற்கரையில் நேற்று அதிகாலை மேலும் ஒரு மரப்பெட்டி கரை ஒதுங்கியது. அதில் ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிக்குளம் கடற்கரையில் நேற்று அதிகாலை 3 அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும், அரை அடி உயரமும் உடைய ஒரு மரப்பெட்டி கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், கீழையூர் கடலோர காவல் குழும போலீஸார் அங்கு சென்று, மரப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பின்னர், அந்த மரப்பெட்டியை நாகை மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர். அவற்றில் என்ன இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. 12 அறைகளுடன் இருந்த அந்த மரப்பெட்டியில், 11 அறைகளில் ஹெராயின் போதைப் பொருள் இருந்ததாகவும், அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே, கடந்த 24-ம் தேதி இதேபோன்ற ஒரு மரப்பெட்டி ஹெராயின் போதைப் பொருளுடன் செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.