Published : 02 Mar 2020 08:12 AM
Last Updated : 02 Mar 2020 08:12 AM

கட்டிடம் உறுதித் தன்மை இழந்ததால் மாதவரம் ரசாயன கிடங்கு இடிப்பு; ஒரே நேரத்தில் 200 வீரர்கள் 19 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்- ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்ப்பு

வலுவிழந்த கட்டிடத்துக்குள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள்

சென்னை

தீயில் சேதம் அடைந்த ரசாயன கிடங்கு முற்றிலும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. தீ பிடித்ததும் ஊழியர்கள் அனைவரும் உடனே வெளியேறியதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.

சென்னை மாதவரம் ஜிஎன்டி சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே ‘ஜி.ஆர்.ஆர். லாஜிஸ்டிக்ஸ் கஸ்டம் வேர்ஹவுஸ்’ என்கிற நிறுவனம் உள்ளது. மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயன மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அவற்றை இங்குள்ள கிடங்கில் வைத்து, பின்னர் இங்கிருந்து இந்தியா முழுவதும் விநியோகம் செய்யும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது. சென்னை துறைமுகத்துக்கு கப்பல் மூலம் பேரல்களில் கொண்டு வரப்படும் ரசாயன பொருட்கள், இங்குள்ள கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன. டெட்ரா ஹைட்ரோ கார்பன், டை மெத்தில் சல்பாக்சைடு உள்ளிட்ட 26 வகையான வேதிப்பொருட்கள் சுமார் 10 ஆயிரம் பேரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ரசாயன பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டவை.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி அளவில் மின்கசிவு காரணமாக இந்த குடோனில் தீ பிடித்தது. கிடங்கு முழுவதும் தீ பரவி, பேரல்கள் வெடிகுண்டுகள் போல வெடித்துச் சிதறின. தீ அருகிலிருந்த 3 கிடங்குகளுக்கும் பரவியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 6 ஸ்கைலிப்ட் வாகனங்கள், 25 தீயணைப்பு வாகனங்கள், ரசாயன தீயை அணைக்கும் 6 வாகனங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கரும் புகையுடன் பல அடி உயரத்துக்குக் கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை இடைவிடாத போராட்டத்துக்குப் பின் இரவு ஒரு மணியளவில் 80 சதவீத தீ அணைக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. காலையில் மீண்டும் தீயணைப்புப் பணிகள் தொடங்கி 9 மணிக்குள் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. தீ முழுவதுமாக அணைக்கப்பட்டாலும் கிடங்கில் இருந்த ரசாயன பொருட்களில் இருந்து தொடர்ந்து புகை வருகிறது. இந்த விபத்தில் ரசாயன பொருட்கள், கிடங்கில் உள்ள கட்டமைப்புகள், பக்கத்து கிடங்குகள், வாகனங்கள் என மொத்தம் நூறு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்தின் காரணமாக கிடங்கு கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்து விட்டது. இதனால் கட்டிடத்தை இடித்து விடுமாறு தீயணைப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து கிடங்கின் உரிமையாளர் ரஞ்சித், கிடங்கை இடிப்பதற்கான பணிகளை உடனே செய்தார். நேற்று காலையில் 5 ஜே.சி.பி. வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கிடங்கு கட்டிடம் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

தீ பிடித்ததும் கிடங்கில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் உடனே அங்கிருந்து வெளியேறியதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. கிடங்கின் அருகே சுமார் 500 மீட்டர் சுற்றளவில் வீடுகளும் இல்லாததால் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லை. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சில தீயணைப்பு வீரர்களுக்கு மட்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களின் 19 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x