4-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு; கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை: உரிமம் பெறாத ஆலைகள் தொடர்ந்து இயங்குவதாக புகார்

4-வது நாளாக வேலைநிறுத்தம் நீடிப்பு; கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை: உரிமம் பெறாத ஆலைகள் தொடர்ந்து இயங்குவதாக புகார்
Updated on
1 min read

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உற்பத்தி யாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாத ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை350-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஒருபுறம் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாத கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படுகின்றன. மறுபுறம் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் கேன் குடிநீர் நிறுவனங்கள் குடிநீர் விற்று வருகின்றன" என்று கேன் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்ஆர்.ராஜசேகரன் கூறியதாவது:

எங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக நேற்று தொடர்ந்தது. இதனால், மாநிலம் முழுவதும் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருச்சியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் செயல்பட்ட 150 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் 120 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுவிட்டன. திண்டுக்கல்லில் உரிமம் பெற்ற 40 கேன் குடிநீர் ஆலைகள் உள்ளன. இதே அளவுக்கு உரிமம்பெறாத கேன் குடிநீர் ஆலைகள் தடையின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த ஆலைகளைஅரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

நீதிமன்றத்தில் விசாரணை

இதனிடையே, எங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித் துறை செயலாளரை சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அப்போது, நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டபடி எளியமுறையில் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு இதுவரை உருவாக்கவில்லை என்பது பற்றியும் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். இவ்வாறு ராஜசேகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in