Last Updated : 02 Mar, 2020 07:52 AM

 

Published : 02 Mar 2020 07:52 AM
Last Updated : 02 Mar 2020 07:52 AM

வங்கி கடன், பொருளாதார உதவிகளை எளிதாக பெற தெரு வியாபாரிகளை ஒருங்கிணைத்து குழு உருவாக்கும் பணி தொடக்கம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏற்பாடு

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களைச் சேர்ந்த தெரு வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட பொருளாதார உதவிகள் கிடைக்க வசதியாக, அவர்களை இணைத்து குழுவாக உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களை விட நகர்ப்புறத்தில் வறுமை அதிக தாக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே நகர்ப்புறங்களில் பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்பாடடைய செய்யும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60 மற்றும் 40சதவீத நிதி பங்களிப்புடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்தஇயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை ஒரு குழுவாக இணைத்து அவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட பொருளாதார உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 1.04 லட்சம்தெரு வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பதால் தங்களது தொழிலை விரிவுபடுத்த நிதியுதவி இல்லாமல் தவிக்கின்றனர். நிரந்தர முகவரி இல்லாதது, அவர்கள் செய்யும் தொழிலுக்கு அரசு உரிமம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு வங்கிகள் கடன் தர மறுக்கின்றன.

எனவே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், தெரு வியாபாரிகளை ஒரு குழுவாக ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தெரு வியாபாரிகளை ஒருங்கிணைத்து அவர்களை குழுவாக இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெரு வியாபாரிகளுக்கு அவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஆகியஅமைப்புகள் மூலம் ஸ்மார்ட்அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே குழுவில் சேர்க்கப்படுவர். இந்தக் குழுவில் சேரும் வியாபாரிகளில் சிலர் ஒரே இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்வர். சிலர் தெருத் தெருவாக சுற்றி வியாபாரம் செய்வர்.

ஒரே இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இடம் சேமிப்பு நாற்காலிகள் வழங்கப்படுகின்றன. மேற்கூரையுடன் கொண்ட இந்த நாற்காலிகள் மூலம் வியாபாரிகள் மழை மற்றும் வெயில் பாதிப்பு இல்லாமல் வியாபாரம் செய்ய முடியும். மேலும், இந்தக் குழுவில் இணையும் வியாபாரிகள் தங்களது தொழிலுக்குத் தேவையான கடனைப் பெற வங்கிகளுக்கு அலைய வேண்டியதில்லை. வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் செய்துக் கொடுக்கப்படும்.

அதேநேரத்தில் வங்கியில் கடன் பெற்றுவிட்டு, அதை முறையாக திருப்பி செலுத்தாமல் அவர்கள் தப்பிக்க முடியாது. அப்படி செய்தால் இந்த ஸ்மார்ட் கார்டு மூலம்அவர்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இதைத் தவிர,அவர்கள் பெறும் கடன் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பைசாஎன்ற இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால் முறைகேடும் நடைபெற வாய்ப்பு இல்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x