Published : 02 Mar 2020 07:31 AM
Last Updated : 02 Mar 2020 07:31 AM

மாதவரம் தீ விபத்தின்போது நச்சு வாயுக்கள் வெளியேறவில்லை: மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் விளக்கம்

சென்னை

மாதவரம் தீ விபத்தின்போது நச்சு வாயுக்கள் ஏதும் வெளியேறவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.வி.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து தொடர்பாக அவர் கூறியதாவது:

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிக அளவில் புகை வெளியேறியது. தெளிவான வானம், காற்றில் ஈரப்பதம் குறைவு, கிழக்கு திசைக் காற்று போன்றவை காரணமாக புகை அனைத்தும் வான் நோக்கி சென்றுவிட்டன. அதனால் அப்பகுதியில் காற்று மாசு ஏதும் இல்லை. அது தொடர்பாக புகார்கள் ஏதும் வரவில்லை. அருகில் குடியிருப்புகள் ஏதும் இல்லை. வெளியேறிய புகையால் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாதவரம் மேம்பாலம் உள்ளிட்ட 5 இடங்களில் நடமாடும் காற்றுத் தர கண்காணிப்பு இயந்திரம் மூலம் காற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டது. இதில், அந்த புகையில் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள்தான் இருந்தன. நச்சு வாயுக்கள் ஏதும் இல்லை.

அச்சப்பட வேண்டாம்

ஒரு கன மீட்டர் காற்றில் 2 மி.கி. கார்பன் மோனாக்சைடு, 400 மி.கி. கார்பன் டை ஆக்சைடு இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். மாதவரம் மேம்பாலம் அருகில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அதிகபட்சமாக கார்பன் மோனாக்சைடு 3.2 மி.கி., கார்பன் டை ஆக்சைடு 403 மி.கி. பதிவாகியுள்ளது.

இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட சற்றே அதிகம். அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

மணலியில் உள்ள காற்றுத் தர கண்காணிப்பு நிலையம் மூலமாக தொடர்ந்து காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x