Published : 02 Mar 2020 07:28 AM
Last Updated : 02 Mar 2020 07:28 AM

2-ம் கட்ட திட்டப்பணி முடிந்த பிறகு சென்னையில் 2026-ல் 190 மெட்ரோ ரயில் ஓடும்: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நிறைவடைந்த பிறகு, 2026-ல் 190 மெட்ரோ ரயில்கள் ஓடும். அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில்சேவை வரும் ஜூலையில் தொடங்கவுள்ளது.

இதற்கிடையே, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்துதல், கட்டுமான பணிகளுக்கு நிறுவனம் தேர்வு செய்தல், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கொண்டு வருவது உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

118 கி.மீ. தூரம்

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சுமார் 118 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நடைபெறவுள்ளன. இதன்மூலம் சென்னையின் அடுத்த தலைமுறை போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில் சேவை உருவெடுக்கும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவிக்கின் றனர்.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சென்னையை சுற்றி முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் 3 வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம். மொத்தம் 118 கி.மீ. தூரம் என்பதால், சென்னை போக்குவரத்து வசதியின் முக்கியமான திட்டமாக இது இருக்கும்.

புதியதாக 138 ரயில்கள்

இதற்காக புதியதாக 138 மெட்ரோ ரயில்களை இணைக்க உள்ளோம். பெரும்பாலான ரயில்களில் 3 பெட்டிகள் இருக்கும். மேற்கண்ட 3 வழித்தடங்களில் 4 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில்சேவை கிடைக்கும். இருப்பினும், தேவை அதிகமாக இருக்கும்போது, அதிகபட்சமாக 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை அளிக்க முடியும்.

2026-ல் இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்த பின்னர் சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை 190 ஆக இருக்கும். இவற்றின் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x