

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப். 5-ம்தேதி குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த பிப். 6-ம் தேதி மண்டலாபிஷேக மண்டகப்படி நிகழ்வுகள் தொடங்கின. 48 நாட்கள் நடைபெற வேண்டிய இந்நிகழ்வுகள், சித்திரை பெருவிழா காரணமாக 24 நாட்களாக குறைக்கப்பட்டன.
மண்டலாபிஷேக தினங்களில் சுவாமியை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, விடுமுறை தினங்களான சனி, ஞாயிறுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், மண்டலாபிஷேக பூர்த்திக்கான நிகழ்வு நேற்று முன்தினம் மாலை முதல் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக நடராஜர் சந்நிதி முன்புயாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பெருவுடையார், பெரியநாயகி ஆகியோருக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், நேற்று அதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓத, வேத மந்திரங்களுடன், வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, பிரகாரத்தை சிவச்சாரியார்கள் வலம் வந்தனர். பின்னர், காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூல மூர்த்திகளுக்கு பால் மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜாபான்ஸ்லே, குடமுழுக்கு விழாக்குழுத் தலைவர் துரை.திருஞானம்,அறநிலையத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட கோயில்நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மண்டலாபிஷேகம் பூர்த்தியான நிலையில், மீதமுள்ள 24 நாட்களும் மூலவமூர்த்திகளுக்கு பால் மற்றும் எண்ணெய் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்படும் என சிவச்சாரியார்கள் தெரிவித்தனர்.