Published : 19 May 2014 01:06 PM
Last Updated : 19 May 2014 01:06 PM

பத்திரிகையாளர்களை தாக்கிய திமுகவினர் 11 பேர் கைது

திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தாக்கிய விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று திமுக பொருளாளர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்ததாக ஞாயிற்றுக்கிழமை தகவல் பரவியது.

இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மு.க.ஸ்டாலின் ராஜினாமா விவகாரம் பற்றி பேட்டி அளித்தார். அப்போது, ஸ்டாலின் ராஜிநாமா செய்திருப்பதை மு.க.அழகிரி இது ஒரு நாடகம் என தெரிவித்து இருக்கிறாரே? என டைம்ஸ் நவ் நிருபர் சபீர் அகமது கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு துரைமுருகன் பதில் அளிக்க மறுத்தார். இதனைத் தொடர்ந்து நீங்கள் நாடகம் ஆடுகிறீர்களா? அல்லது அவர் நாடகம் ஆடுகிறாரா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, பேட்டியை முடித்துவிட்டு துரைமுருகன் வெளியே சென்றுவிட்டார்.

அப்போது, அங்கிருந்த திமுகவினர் நிருபர் சபீர் அகமது மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அடி தாங்க முடியாமல் நிருபர் சபீர் அகமது மு.க.ஸ்டாலின் வீட்டுக்குள் ஓடினார். பின்னால் துரத்திச் சென்ற திமுகவினர், அவரை மீண்டும் தாக்க முயன்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை போட்டோ எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களையும் மிரட்டினர். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர் சபீர் அகமதுவை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டின் பின்வழியாக அழைத்துச் சென்று சிறிது தூரத்தில் இறக்கிவிட்டார்.

தாக்குதலில் நிருபர் சபீர் அகமது முகத்திலும், வீடியோ கிராபர் நெஞ்சிலும் காயம் ஏற்பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் கார்த்திகேயனும் காயம் அடைந்தார். கேமராக்கள் மற்றும் வீடியோ கேமராக்களை கீழே போட்டு திமுகவினர் உடைத்து எறிந்தனர். அதன்பின், அங்கு கூடியிருந்த நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்களையும் துரத்தினர்.

இதனைத் தொடர்ந்து திமுகவினர் நந்தனம் சேமியர்ஸ் சாலையில் டைம்ஸ் நவ் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை மிரட்டினர். பத்திரிகையாளர்களை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றாகச் சென்று தேனாம்பேட்டை காவல் நிலையம் மற்றும் வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x