

விருதுநகரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.380 கோடியில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.833 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
இவ்விழாவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
விழாவில் ரூ.234 கோடி மதிப்பில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தையும், ரூ.2.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும், ரூ.1.94 கோடியில் கட்டப்பட்டு உள்ள சிவகாசி பேருந்து நிலையம் ஆகியற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
ரூ.1.63 கோடியில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.444 கோடியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்கான புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்டவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
ரூ.3.05 கோடியில் வத்திராயிருப்பில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டும் பணி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் திருச்சுழி, வீரசோழனில் ரூ.1 கோடியில் சார்-பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 22,350 பேருக்கு மொத்தம் ரூ.833 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.