

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரனின் போளூர் வீட்டில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், எல்ஐசி பாலிசி, வங்கி கணக்கு புத்தகங்களை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர் தினகரன். இவர் திருவண்ணாமலை மாவட்டம், இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரஞ்சித்குமார் (31) என்பவரின் நிலத்துக்கான பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரன் மற்றும் அவரது கார் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஆகியோரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.50 ஆயிரத்துடன் கணக்கில் வராதப்பணம் ரூ.1.94 லட்சத்தை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், காட்பாடியில் தினகரன் குடியிருந்த வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் அங்கு டிரங்க் பெட்டியில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 76 லட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதில், 500 ரூபாய் நோட்டு கட்டுகளே அதிக அளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெறும் 26 லட்சத்துக்கு மட்டுமே இருந்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாத நோட்டாக அறிவிக்கப்படும் என்ற வதந்தியால் தினகரன் லஞ்சம் வாங்கும்போதே 500 ரூபாய் நோட்டுகளாக கேட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள தினகரனின் சொந்த வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி தேவநாதன், ஆய்வாளர்கள் விஜய், ரஜினிகாந்த், விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் விடிய,விடிய சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, போளூர் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தினகரன் குடும்பத்தார் பெயரில் எடுக்கப்பட்ட எல்ஐசி பாலிசி பத்திரங்கள், மியூசுவல் பண்ட் பத்திரங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் தினகரன் அவரது குடும்பத்தார் பெயர்களில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி வேலூருக்கு கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் கூறியதாவது:
வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரன் கைது செய்யப்பட்ட உடன் அவரது கார் மற்றும் அலுவலகத்தில் சோதனையிட்டதில் ரூ.2.44 லட்சம் பணம், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளோம். அது மட்டுமின்றி போளூரில் உள்ள அவரது வீட்டில் இருந்தும் சில ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், எல்ஐசி பாலிசி பத்திரங்கள் உள்ளிட்டவைகளை கைபற்றியுள்ளோம். ஓட்டுநர் ரமேஷ்குமார் வீட்டிலும் சோதனை நடத்தியபோது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
அதை கொண்டு அடுத்த கட்ட விசாரணை நாளை (இன்று) திங்கள்கிழமை தொடங்க உள்ளோம். காட்பாடியில் உள்ள வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்து குறுகிய காலத்தில் அவர் லஞ்சமாக வாங்கிய பணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முத்திரை கட்டணம் மட்டுமின்றி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியராக கூடுதல் பொறுப்பை தினகரன் வகித்து வந்ததால் எந்தெந்த வழிகளில் பணம் சம்பாதிக்க முடியுமோ அதன்படி குறுக்கு வழிகளை பயன்படுத்தி தினகரன் லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் 76 லட்சம் வரை பணத்தை சம்பாதித்த தினகரன் தன் பணிக்காலத்தில் எவ்வளவு பணம் குறுக்கு வழியில் சம்பாதித்துள்ளார் என்பது குறித்து தற்போது விசாரணை தொடங்கியுள்ளோம். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி வேறு சில மாவட்டங்களிலும் அவர் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சார் பதிவாளர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் பட்டியல் தயார் செய்து வருகிறோம் அதற்கான விசாரணை விரைவில் தொடங்கும் என்றனர்.