

காரைக்கால்-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் இதற்கு தடைவிதிக்கவும், திட்டத்தை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். இதை முதல்வர் நாராயணசாமியும் உறுதி செய்துள்ளார்.
காரைக்கால்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தது. இலங்கையிலிருந்து ஆன்மிக பயணமாக காரைக்கால், புதுச்சேரி, தமிழக பகுதிகளுக்கு ஏராளமாக வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த 27-ம் தேதி புதுவை வந்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது, இலங்கை- காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தனியார் பங்களிப்புடன் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவோடு செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
ரத்து செய்ய மத்திய அரசுக்கு கிரண்பேடி கடிதம்
இந்நிலையில் இலங்கை-காரைக்கால் கப்பல் போக்குவரத்து திட்டத்தை ரத்து செய்ய மத்திய இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பாக அரசு தரப்பில் விசாரித்தபோது, கடிதம் அனுப்பியுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் பல திட்டங்களை டெல்லி சென்று கொண்டு வந்தாலும் ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தடையாகதான் உள்ளார். இலங்கை-காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க டந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி தந்தது. ஆனால் இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் கிரண்பெடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.