கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்: ராமநாதபுரத்தில் முதல்வர் பேச்சு
கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், உதகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
ராமநாதபுரத்தில் பட்டினம்காத்தான் அம்மா பூங்கா அருகே ரூ.345 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இங்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக 22.6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா அம்மா பூங்கா அருகே உள்ள திடலில் இன்று (மார்ச் 1) காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
விழாவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முதல்வர் பழனிசாமி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டினார்.
மேலும் மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உதவியாளா்கள் தங்கும் மையம், பரமக்குடியில் ரூ.1.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்-சேய் நல சிகிச்சை மையம், கீழத்தூவலில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 5 புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 1,650 இடங்கள் பெறப்பட்டுள்ளன.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 22 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ கல்லூரி அமைகிறது. ராமநாதபுரத்தில் சுகாதார துறையில் 10 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முன்பு அறிவித்த திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
