முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை: ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகளிடம் உறுதியளித்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்துடன் ஜமாஅத் உலமா சபை தலைவர் கே.எம்.பாகவி மற்றும் நிர்வாகிகள்
நடிகர் ரஜினிகாந்துடன் ஜமாஅத் உலமா சபை தலைவர் கே.எம்.பாகவி மற்றும் நிர்வாகிகள்
Updated on
2 min read

முஸ்லிம்களின் அச்சத்தை போக்க தேவையானவற்றை செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்தாக ஜமாஅத் உலமா சபை தலைவர் கே.எம். பாகவி தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி கலவரம் குறித்து தனது பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தார். டெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி, உளவுத்துறை என்பது உள்துறை அமைச்சகம் தோல்விதான், கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள் என ரஜினி பேசியிருந்தார்.

இதுதவிர சிஏஏ குறித்தும் என்பிஆர், என்ஆர்சி குறித்தும் தங்களுக்கு புரிதல் வேண்டும் என எழுதிய இஸ்லாமிய அமைப்பின் தலைவரை அழைத்து நாம் நேரில் பேசுவோம் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை போயஸ் இல்லத்தில் ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகமது அபூபக்கர் நேற்று சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உட்பட பல்வேறு கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதுமட்டுமின்றி முஸ்லிம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர்.

ஜமாஅத் உலமா சபை தலைவர் கே.எம்.பாகவி
ஜமாஅத் உலமா சபை தலைவர் கே.எம்.பாகவி

பின்னர் சந்திப்பு குறித்து ஜமாஅத் உலமா சபை தலைவர் கே.எம்.பாகவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் இன்று நடிகர் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம். என்பிஆர் தொடர்பான எங்கள் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொண்டோம்.

என்பிஆர் காரணமாக முஸ்லிம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ரஜினிகாந்திடம் விரிவாக கூறினோம். நாங்கள் கூறிய கருத்துக்களை அவர் புரிந்து கொண்டார். முஸ்லிம் மக்களின் அச்சத்தை போக்க என்ன தேவையோ அதனை செய்வதாக அவர் உறுதியளித்தார். ’’ எனக் பாகவி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in