விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படுமா?- முதல்வர் அறிவிப்பை எதிர்பார்க்கும் மாணவர்கள்

விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படுமா?- முதல்வர் அறிவிப்பை எதிர்பார்க்கும் மாணவர்கள்
Updated on
1 min read

விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி தொடங்க தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவாரா என மாணவர்களும் கல்வியாளர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகரில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர் நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி என அரசு சார்பில் பல்வேறு கல்வி மையங்கள் இயங்கி வருகின்றன.

ஆனால், இதுவரை விருதுநகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படவில்லை. இதனால் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நம்பியே உள்ளனர். அரசு கலைக் கல்லூரி இல்லாததால் மாணவர்கள் பலர் உயர்க்கல்வி படிக்க வெளியூருக்குச் சென்றுவர வேண்டியுள்ளது.

எனவே, அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூரில் உள்ளதுபோல் அரசு கலைக்கல்லூரி அல்லது பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாவது விருதுநகரிலும் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக உள்ளது.
மேலும் விருதுநகரில் அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் தமிழக முதல்வர் பழனிசாமி விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று மாலை அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் பழனிசாமி விருதுநகரில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விருதுநகரில் தொடங்க உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்டப்படுமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in